அளவற்ற ஆனந்தத்தை அள்ளித் தரும் ராமர்
ஆஞ்சநேயர் நாவில் வாழும் நாமமான ராமர்
அன்பென்ற ஆழ்கடலை நெஞ்சில் கொண்ட ராமர்
சீதையென்ற தேவதையின் தேவனான ராமர்
மக்கள் குறை போக்குகின்ற மன்னனான ராமர்
தசரதரின் புதல்வனான தவப்பயனாம் ராமர்
தெய்வமென்ற உண்மையதை மறந்து வந்த ராமர்
தெய்வ சித்திகளை பாற்கடலில் துறந்து வந்த ராமர்
பண்புக்கு இலக்கணமாய் சிறந்து நின்ற ராமர்
மக்களொடு மக்களாக வாழ்ந்து சென்ற ராமர்
பாதத்தை பிடித்தவரை கைவிடாத ராமர்
சீதையன்றி வேறு பெண்ணை கைதொடாத ராமர்
ஐம்புலனை கட்டிவைத்த ஞானியான ராமர்
ஐம்பூதங்களும் தீண்டவொண்ணா பிரம்மமான ராமர்
பரதரென்ற சுத்தருக்கே அண்ணனான ராமர்
லவகுசரென்ற வீரருக்கே அப்பனான ராமர்
தன் பெருமை இதுவென்று சிந்திக்காத ராமர்
தீங்கிழைத்த நபரைக் கூட நிந்திக்காத ராமர்
குற்றமுள்ள எவரையுமே குறை சொல்லா ராமர்
குறைவான வார்த்தை கொண்டு உரையாற்றும் ராமர்
அதிர்ஷ்டத்தை ஒருபோதும் நம்பாத ராமர்
அலட்சியமாய் எச்செயலும் செய்யாத ராமர்
கண் உறுத்தாமல் காட்சி தரும் கண்ணியவான் ராமர்
கண நேரமேதும் பொய்சொல்லா சத்தியவான் ராமர்
அண்ணலுக்கு அறப்போரை அறிவுரைத்த ராமர்
பத்ராச்சல ராமதாசர் பாடிவைத்த ராமர்
ராமகிருஷ்ணர் தன்னில் கண்ட ஆத்மனான ராமர்
விவேகானந்தருக்கு பசித்தபோது உணவு தந்த ராமர்
ராகவேந்திரர் பூஜைசெய்த திருமூல ராமர்
யோகி ராம்சுரத்குமாரரும் ஆராதித்த ராமர்
கௌசல்யை பெற்றெடுத்த வீரரான ராமர்
கைகேயி புகழ் சேர்த்த மாசற்ற ராமர்
ராமருக்கு இணையாக யாருமில்லையே
விண்ணுலகில் மண்ணுலகில் ஒரு பேருமில்லையே
ராமபக்தி அன்றி வேறு பேறுமில்லையே
ராமநாமம் சொல்லாதது நாவுமில்லையே
சொல்லச் சொல்ல அவர் பெருமை தீரவில்லையே
உண்டாகும் மகிழ்ச்சி சொல்ல வார்த்தையில்லையே
எவ்வளவு நினைத்தாலும் சலிக்கவில்லையே
நினைத்து நினைத்து என் மனது வலிக்கவில்லையே
ராமபக்தி கிடைத்த பின்பு தேவையில்லையே
கர்மவினை பற்றி கவலைக் கொள்ளும் வேலையில்லையே
அவர் காலை இடைவிடாது பிடித்து கொள்கிறேன்
நெஞ்சத்தின் கூட்டுக்குள் அடைத்துக் கொள்கிறேன்
மனதுக்குள் அவர் கால்நகங்கள் வெட்டியும் விட்டேன்
மலர்ச்சரம் கொண்டு அவர் காலை கட்டியும் விட்டேன்
பக்தி செய்தே அவரை சிறை பிடித்தும் கொண்டேன்
அடம்பிடித்தே அவரருளை பிடிங்கியும் கொண்டேன்
குட்டி ஆஞ்சநேயராகவே எனை நினைக்கிறேன்
ராமநாமம் சொல்லி சொல்லி எனை மறக்கிறேன்
கையில் காசில்லா செல்வந்தன் நானல்லவா
ராம பக்தியின்றி செல்வமெல்லாம் வீணல்லவா
ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம ராம ராம ராம ராம்
1 comments:
Thanks :)
Post a Comment