ஒளிர்கின்ற முகமுடையாய் ஒளிர்கின்ற கண்ணனே
ஒளிர்கின்ற சிரசுடையாய் ஒளிர்கின்ற முகத்தனே
ஒளிர்கின்ற காதுடையாய் ஒளிர்கின்ற மூக்கனே
ஒளிர்கின்ற கழுத்துடைய பரிமுகநற் தேவனே
ஒளிர்கின்ற உதடுடையாய் ஒளிர்கின்ற பல்லனே
ஒளிர்கின்ற நெற்றியனே ஒளிர்கின்ற கன்னனே
ஒளிர்கின்ற நாக்குடையாய் ஒளிர்கின்ற சொல்லனே
ஒளிர்கின்ற பரிமுகனே சகலகலா வல்லனே
ஒளிர்கின்றது கருங்கேசம் ஒளிர்கின்றது மகுடமே
ஒளிர்கின்றன கண்முடிகள் ஒளிர்கின்றன புருவங்கள்
ஒளிர்கின்றது திருநாமம் ஒளிர்கின்றன கோடுகள்
ஒளிர்கின்றன வெண்கோடுகள் செங்கோடும் பரிமுகா
ஒளிர்கின்றது பொன்மகுடம் ஒளிர்கின்றன தோடுகள்
ஒளிர்கின்றது கௌத்துபம் ஒளிர்கின்ற மார்பின்மேல்
ஒளிர்கின்றது முத்துமாலை ஒளிர்கின்ற கழுத்திலே
ஒளிர்கின்றது வனமாலை நறுமணமாய் பரிமுகா
ஒளிர்கின்றன நாற்கரங்கள் ஒளிர்கின்றன விரல்களும்
ஒளிர்கின்றன உள்ளங்கைகள் ஒளிர்கின்றன நகங்களும்
ஒளிர்கின்றன கங்கணங்கள் ஒளிர்கின்றன காப்புகள்
ஒளிர்கின்றது பாஞ்சசன்யம் சுதர்சனமும் பரிமுகா
ஒளிர்கின்றது செம்பட்டு ஒளிர்கின்ற தோள்களில்
ஒளிர்கின்றது வெண்பட்டு ஒளிர்கின்ற இடையிலே
ஒளிர்கின்றது மஞ்சள்பட்டு ஒளிர்கின்ற கால்களில்
ஒளிர்கின்றன மலரடிகள் காலணிகளும் பரிமுகா
ஒளிர்கின்ற உன்னடிகள் தரும்ஞானம் ஒளிருதே
ஒளிர்கின்ற ஞானமதால் அஞ்ஞானயிருள் அகலுதே
ஒளிர்கின்ற சூரியனாய் உள்ளத்தில் ஒளிர்பவா
ஒளிர்கின்ற அமரர்களால் போற்றப்படும் பரிமுகா
ஒளிர்கின்ற சேடன்மேல் ஒளிர்கின்றாய் பரிமுகா
ஒளிர்கின்ற உன்மடியில் ஒளிர்கின்றாள் திருமகள்
ஒளிர்கின்றன வேதங்கள் ஒளிர்கின்ற இடக்கையில்
ஒளிர்கின்றது படிகமாலை வலக்கையில் பரிமுகா
ஒளிர்கின்றன மோதிரங்கள் ஒளிர்கின்ற விரல்களில்
ஒளிர்கின்ற செங்கைகளில் ஒளிர்கின்றன ரேகைகள்
ஒளிர்கின்றன மருதாணிக் கோலங்களுன் கைகளில்
ஒளிர்கின்றது என்னறிவு உன்னருளால் பரிமுகா
ஒளிர்கின்ற உன்னடி துயரறுக்கும் சுடரடி
ஒளிர்கின்ற உன்னடி பற்றறுக்கும் திருவடி
ஒளிர்கின்ற உன்னடி ஞானம்தரும் நல்லடி
ஒளிர்கின்ற உன்னடி வீடுதரும் பொன்னடி
0 comments:
Post a Comment