CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

ஸ்ரீராமர்புகழ்

நம்மைப்போல சிரித்தவர் நம்மைப்போலே அழுதவர்
நம்மைப்போலே காதலித்து காதலோடு வாழ்ந்தவர்
இழப்புகளைக் கண்டவர் மீண்டெழுந்து வந்தவர்
உறவுகளைப் பிரிந்திருக்கும் சோகங்களை அறிந்தவர்
செல்வத்தையும் கண்டவர் ஏழ்மையையும் கண்டவர்
செல்வத்திலும் ஏழ்மையிலும் செம்மையாக வாழ்ந்தவர்

விதியென்னும் புயலிலே ஆடாத மரமல்லர்
அத்தனை புயலிலும் வீழாத மரமவர்
தன்னுயிராம் சீதையை தியாகம்செய்த மேன்மையர்
இதயத்தில் சீதையை இழக்காத ஆண்மையர்
புரிதலில்லா மக்களை பொறுத்துக்காத்த பூமியர்
புரிந்தபின் இதயத்தில் உயிரான சாமியர்

என்னுயிரும் ராமரே என்மூச்சும் ராமரே
என்னிதயம் ராமரே என்வாழ்க்கை ராமரே
என்கண்கள் ராமரே கண்மணியும் ராமரே
என் மனத்திரையில் எப்பவும் மலருமவர் ரூபமே
என் மூளை எப்பவும் துதிப்பதவர் பாதமே!

ராமர் ராமர் ஜெய ராஜா ராமர்
ராமர் ராமர் ஜெய சீதா ராமர்
ராமர் ராமர் ஹரே ரகுவர ராமர்
ராமர் ராமர் ஹரே ரவிகுல ராமர்

கொழு கொழு குழந்தை கௌசல்ய ராமர்
துறு துறு சிறுவன் தசரத ராமர்
கல்விகள் கற்ற வசிஷ்ட ராமர்
ஆற்றல்கள் பெற்ற கௌசிக ராமர்

இணை பிரியாதவர் லக்ஷ்மண ராமர்
ராஜ குருவாம் பரத ராமர்
தந்தை போன்றவர் சத்ருக்ன ராமர்
அன்புள்ள கணவன் சீதா ராமர்

உற்ற தோழன் குகனின் ராமர்
உதவும் நண்பன் சுக்ரீவ ராமர்
தெய்வ உருவாம் அனுமத் ராமர்
ஞான சூரியன் ஜாம்பவ ராமர்

மூத்த மகனாம் சுமித்ர ராமர்
மன்னவன் பிள்ளை சுமந்தர ராமர்
மன்னித்தருளும் கைகேயே ராமர்
மகனே போன்றவர் ஜனக ராமர்

எளிய விருந்தினர் சபரியின் ராமர்
அபயம் அளிப்பவர் விபீஷண ராமர்
கடன்கள் தீர்ப்பவர் சடாயு ராமர்
பாப வினாசனர் கோதண்ட ராமர்

ஆண்கள் போற்றும் ஆதர்ஷ ராமர்
பெண்கள் போற்றும் கற்புடை ராமர்
மக்கள் மகிழும் அரசுடை ராமர்
பக்தர் நெகிழும் பண்புடை ராமர்

வேள்விகள் காக்கும் காவலன் ராமர்
சாபங்கள் போக்கும் அகல்ய ராமர்
இரு மனம் இணைக்கும் கௌதம ராமர்
திருமண நாயகன் ஜானகி ராமர்

சிவ வில் முறித்த பராக்ரம ராமர்
ஹரி வில் தரித்த சத்ரிய ராமர்
கடலை வென்ற வருண ராமர்
பாலம் கண்ட சேது ராமர்

மரம் ஏழு துளைத்த தீர ராமர்
மறு நாள் வரச்சொன்ன வீர ராமர்
குறையற்ற குணமகன் வீர்ய ராமர்
குலப் புகழ் காத்த சூர்ய ராமர்

சீதையைப் பிரிந்த மக்களின் ராமர்
காதலை மறவா சீதையின் ராமர்
தாயுமானவர் லவகுச ராமர்
தாயாய்க் காக்கும் விஷ்ணு ராமர்

கீதை தந்த கண்ணன் ராமர்
கண்ணனே வணங்கும் கண்ணிய ராமர்
சிவனை வணங்கும் பக்த ராமர்
சிவனே ஜபிக்கும் புண்ணிய நாமர்

முனிவர்கள் போற்றும் பிரம்மம் ராமர்
தவசிகள் நினைக்கும் நித்திய ராமர்
காந்தியின் கடவுள் சத்திய ராமர்
அறப் போர் பணித்த ஆண்டவன் ராமர்

ராம் ராம் என்றால் நல்லது நடக்கும்
ராம் ராம் என்றால் அமைதி கிடைக்கும்
ராம் ராம் என்றால் குணங்கள் சிறக்கும்
ராம் ராம் என்றால் மகிழ்ச்சி பிறக்கும்

ராம் ராம் என்றால் உள்ளம் உருகும்
ராம் ராம் என்றால் உவகை பெருகும்
ராம் ராம் என்றால் அறிவுத் தெளியும்
ராம் ராம் என்றால் தர்மம் புரியும்

ராம் ராம் என்றால் வீரம் விளங்கும்
ராம் ராம் என்றால் வெற்றி விழையும்
ராம் ராம் என்றால் செல்வம் செழிக்கும்
ராம் ராம் என்றால் கதவுகள் திறக்கும்

ராம் ராம் என்றால் மனது அடங்கும்
ராம் ராம் என்றால் புலன்கள் ஒடுங்கும்
ராம் ராம் என்றால் யோகம் நிலைக்கும்
ராம் ராம் என்றால் மோட்சம் கிடைக்கும்

ஸ்ரீ ராமர் புகழை தினமும் ஜபித்தால்
ஒரு வைரம் போல மனதில் பதித்தால்
துன்பம் எல்லாம் தொலைவில் ஓடும்
இன்பம் எல்லாம் விரைவில் கூடும்

ஸ்ரீராமபுண்யஜெயம்

ஸ்ரீராமபுண்யஜெயம்

பெரிய குரு தட்சணை

தேவகிநந்தன் வசுதேவபுத்ரன்
யசோதேயன் நந்தகுமாரன்

ஆயன் மாயன் சேயன் தூயன்
இலையன் சிலையன் களையன் மலையன்
அமிழ்ந்தவன் உமிழ்ந்தவன் விழுங்கினன் முழங்கினன்
உதைத்தவன் வதைத்தவன் கதைத்தவன் சிதைத்தவன்

ஆலன் லீலன் சீலன் ஞாலன்
பாலன் வாலன் காலன் காலன்
குறும்பன் கரும்பன் இரும்பன் துரும்பன்
ஆடலன் விளையாடலன் கூடலன் குழலூதினன்

ராதையன் பூங்கோதையன்
பாதையன் நற்கீதையன்
துகிலிழுத்தவன் துகிலளித்தவன்
உடனிருப்பவன் துயரறுப்பவன்

உரலுருட்டினன் உறித்திருட்டினன்
தோலிருட்டினன் பொய்புரட்டினன்
மலையெடுத்தவன் குடைப்பிடித்தவன்
தேர்ச்செழுத்தினன் தேரழுத்தினன்

மண்ணையுண்டவன் வெண்ணையுண்டவன்
கீரையுண்டவன் தோலையுண்டவன்
அவலையுண்டவன் அகிலமுண்டவன்
அறிவுக்குவிருந்தினன் மனதுக்குமருந்தினன்

ஏகன் அனேகன் ப்ரணவன் ப்ராணன்
ஈகன் இகபரன் அரங்கன் சுரங்கன்
மயக்கினன் கலக்கினன் விளக்கினன் விளக்கினன்
லயித்தவன் ஜெயித்தவன் நழுவினன் சிறையினன்

பன்முகன் இன்முகன் நன்முகன் நாயகன்
இன்னகன் விண்ணகன் மண்ணகன் தாயகன்
இன்மனன் நன்மனன் பொன்மனன் பூமணன்
சற்குணன் பொற்குணன் நற்குணன் நாரணன்

மேஷன் ரிஷபன் மிதுனன் கடகன்
சிம்மன் கன்யன் துலான் விருச்சிகன்
தனுஷன் மகரன் கும்பன் மீனன்
கிரகன் நட்சத்திரன் நாடியன் நற்சோதிடன்

முதலையறுத்தவன் யானைவிடுத்தவன்
கஜேந்திரவரதன் நரேந்திரவதனன்
உரலையிழுத்தவன் மரத்தைவிடுத்தவன்
நளகூபரவரதன் நலமேதருவதனன்

ஆமேய்த்தவன் ஆதேய்த்தவன்
புல்லூட்டினன் பால்கூட்டினன்
ஆவருடினன் ஆதடவினன்
ஆசுற்றினன் ஆபற்றினன்

ஆவணைத்தவன் ஆவனைத்தவன்
ஆமயக்கினன் ஆயியக்கினன்
ஆவுக்கொருநண்பன் ஆவிரும்புமன்பன்
ஆமணிக்கிசைவன் ஆமணியின்னிசையன்

காளிங்கநர்த்தனன் ஆலிங்கனர்த்தனன்
ராசலீலாதாரி பரமவுபகாரி
அகயோகியன் சுகபோகியன்
தவவீரியன் சுபகாரியன்

ஸ்ரீபாண்டவதூதன் ஸ்ரீபார்த்தகீதன்
பான்சசன்யசத்தன் குருட்சேத்திரயுத்தன்
பரீட்சீத்தைமீட்டான் தற்பெருமைகாட்டான்
இஷ்டத்துக்குக்கல்யாணன் பிரம்மச்சர்யப்ரமாணன்

வாழைபோல்செழிப்பன் ஆலைமேல்மிதப்பன்
ஊழிதோறும்பிறப்பன் வாழியெனவுரைப்பன்
அருந்தருமகற்பன் பெருஞ்சத்யகவசன்
கடமையிருகண்ணன் கண்ணியகருமன்னன்

ஆனந்தசயனன் ஆனந்தநடனன்
கரும்புஜகசயனன் கரும்புஜகநடனன்
நவநீதசோரன் தங்கமணியாரன்
புன்முறுவல்காரன் கீர்த்தியபாரன்

தோப்புக்கரணன் அபிஷேகன் அலங்காரன் புகழாரன்
பொன்னாரன் பூவாரன் பல்லாரன் சொல்லாரன்
மலராரன் மல்லியாரன் முத்தாரன் மணியாரன்
தாமரையாரன் வெண்தாமரையாரன்
செண்பகமலராரன் செந்தாமரையாரன்

கலியமூர்த்தி எளியமூர்த்தி இனியமூர்த்தி புனிதமூர்த்தி
மறைமூர்த்தி மலைமூர்த்தி சத்யமூர்த்தி நித்யமூர்த்தி
வரதமூர்த்தி விரதமூர்த்தி தேவமூர்த்தி தெய்வமூர்த்தி
அன்புமூர்த்தி அகிலமூர்த்தி அண்டமூர்த்தி உண்டமூர்த்தி

கோப்ரியன் கோபிப்ரியன் ஆப்ரியன் ஆவினப்ரியன்
கோநேசன் கோதாசன் கோவாசன் கோவீசன்
கோபாலன் கோவாளன் கோவைத்தியன் கோவைத்தனன்
பால்சோறுப்ரியன் திருவெண்ணைப்ரியன்
தயிர்சாதப்ரியன் நீர்மோர்ப்ரியன்

குதிரைமுகன் கூர்மமுகன் பன்றிமுகன் சிங்கமுகன்
ராமமுகன் கிருஷ்ணமுகன் கருணைமுகன் பொறுமைமுகன்
நல்லமுகன் ஞானமுகன் வல்லமுகன் வரதமுகன்
சூர்யமுகன் சந்திரமுகன் மலர்ச்சிமுகன் குளிர்ச்சிமுகன்

திருத்துழாய்ஆரன் சதுர்வேதஆரன்
பிரபந்தஆரன் அபங்கஆரன்
திருவாய்மொழியாரன் திருப்பாவைமணியாரன்
பல்லாண்டுமுத்தாரன் நாச்சியார்மொழியாரன்

திருமழிசைத்தமிழாரன் மதுரகவிமொழியாரன்
திருமாலையாரன் ஸ்ரீசுப்ரபாதன்
கொஞ்சுகுலசேகரபிஞ்சுதமிழாரன்
திருமங்கைமன்னன்பெரியமொழியாரன்

திருப்பாவையாரன் நாச்சிமொழியாரன்
திருமொழியாரன் சந்தவிருத்தாரன்
திருமாலையாரன் திருவெழுச்சியாரன்
அன்றலர்ந்ததாமரையன் சென்றுளவுமாநிறையன்
கொண்டலுடைவான்நிறத்தன் வெள்ளைமனபால்நிறத்தன்

ஸ்ரீராமானுஜஜெயம்

ஸ்ரீராமானுஜஜெயம்

இளையபெருமாள் துதி

அவர் படுக்கப்போனால் அவர் படுக்க முன்படுத்தீர்
அவர் பிறக்கப்போனால் அவர் சிறக்க பிறப்பெடுத்தீர்
அவர் மழையிலானால் நனையவிடாமல் நீர் குடையானீர்
அவர் மழையானால் சிதறவிடாமல் நீர் கூடையாவீர்

அவர் அமரப்போனால் அவர் அமர ஆசனமாய்
அவர் ஆளப்போனால் அவர் ஆள தாசனுமாய்
அவர் நிற்கப்போனால் அவர் நிற்க நீர் மேடை
உமக்கு கட்டளையாவதவர் முகக்குறிப்பு கண்ஜாடை

அவர் தமையனானால் அவர் அணைக்க நீர் தம்பி
அவர் தம்பியானால் அவரை அணைக்க நீர் தமையன்
அவர் தலைவனானால் அவருக்கு நீர் தொண்டன்
நீர் தலைவனானால் உமக்கு அவர் தொண்டன்

அவர் வேதமானால் நீர் விளக்கம்தரும் ஆசான்
அவர் கீதையானால் நீர் பொருளுரைக்கும் பாஷ்யான்
அவர் நடக்கும் பாதையெல்லாம் நீர் முன்சென்று திருத்துவீர்
அவருக்காய் உண்ணாமல் உறங்காமல் உம்மைநீர் வருத்துவீர்
பொன்ஆதிஷேஷ ராமானுஜேஷ
லக்ஷ்மண அருளாளே பலராமப் பெருமாளே
உடையவரே பாஷ்யரே உடையளவில் காஷ்யரே
எதிராஜ மூர்த்தி எண்ணற்ற கீர்த்தி

கோவிலொரு கோபுரம் சுருக்கமாய் ஏறி
நாராயண மந்திரம் முழக்கமாய் கூறி
அனைவருக்கும் மோக்ஷம் வழங்கினீர் வாரி
நரகம் புக துணிந்த பரம உபகாரி

இளையபெருமாளே உம் பாதம் போற்றி
லக்ஷ்மணப்பெருமாளே உம் சேவை போற்றி
பலராமப்பெருமாளே உம் கீர்த்தி போற்றி
ராமானுஜேஷரே உம் தொண்டு போற்றி

கிருஷ்ண பலராமரே போற்றி
பலராம கிருஷ்ணரே போற்றி
ராம லக்ஷ்மணரே போற்றி
லக்ஷ்மண ராமரே போற்றி!!

ஸ்ரீராமதூதஜெயம்

ஸ்ரீராமதூதஜெயம்

சின்ன குரு தட்சணை

அஞ்சனை பெற்ற அருந்தவப் புதல்வனே
வஞ்சனையற்ற பக்தியில் முதல்வனே
ராம பக்தியில் தன்னை இழந்திடும்
தன்னை இழப்பதில் உள்ளம் நெகிழ்ந்திடும்
நல்ல வித்தையில் நீயென் முன்னோடி
அதை நான் கற்றிட கேட்கிறேன் மன்றாடி

மீண்டும் மீண்டும் கனவில் வந்து
உள்ளம் தளரா ஊக்கம் தந்து
எனை ராம பக்தனாய் ஆக்கிய குருவே
பணிவின் துணிவின் பக்தியின் உருவே
எப்படி சொல்வேன் நன்றிகள் உனக்கு
கைம்மாறு செய்ய வக்கில்லை எனக்கு

காமக் களியாட்டம் நிறைந்த இலங்கையில்
ராக்கதர் யாவும் உறங்கும் வேளையில்
ராம தூதனாய் உள்ளே நுழைந்தாய்
ராக்கதர் ஆட்டத்தை அறவே களைந்தாய்
நான் இருந்ததனாலா நடமாடும் இலங்கையாய்
நானுறங்கும் வேளையில் என்னுள்ளே புகுந்தாய்?

ஆணவம் உள்ளவன் நானென புரிந்தும்
காடென வளர்த்த காமங்கள் தெரிந்தும்
கதையோடு எந்தன் கனவில் தோன்றினாய்
பக்தியின் விதையை சேற்றில் ஊன்றினாய்
ராவணன் மமதையை நெருப்பால் எரித்தாய்
என் மமதையை மட்டுமேன் அன்பால் கரைத்தாய்?

எண்ணுருப்பு தேய நிலத்தில் விழுகிறேன்
ராம பக்தனே உன் பாதம் தொழுகிறேன்
நீ கைகூப்பும் நிலையை மனதில் கொணர்கிறேன்
ஆணவம் அற்றல் இதுவென உணர்கிறேன்
இறை படைப்பில் உனைவிட செல்வந்தர் இல்லை
இதை உணர்ந்ததால் என்னுள் ஏழ்மைகள் இல்லை

அடியேன் பணிகிறேன் உன் பாதம் தொழுகிறேன்
இன்னொரு இமயமே உன் கால்களில் விழுகிறேன்
இவ்வுலகம் எனையும் உனைப் போல கொள்ளட்டும்
இன்னொரு அனுமன் இவனென்று சொல்லட்டும்

ஸ்ரீராமருக்காய் மலைசுமந்த உன் தோளுக்கு வணக்கம்
வெண்கல மணியணிந்த உன் வாலுக்கு வணக்கம்
ஸ்ரீராமர்புகழ் பாட நீ மீட்டும் யாழுக்கு வணக்கம்
உன்னையே தாங்கி நிற்கும் உன் காலுக்கு வணக்கம்

ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்!!

ரோம ரோமமு ராம நாமமே!

ஓம் ஸ்ரீசீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன அனுமந்த் சமேத ஸ்ரீராமச் சந்திர பரப்பிரம்மணே நமஹ!

கற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ?,
புற்பா முதலாப் புல்லெறும் பாதியொன் றின்றியே,
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்,
நற்பாலுக் குய்த்தனன் நான்முக னார்பெற்ற நாட்டுளே.
- நம்மாழ்வார்


சிவனோ அல்லன் நான்முகனோ அல்லன் திருமாலாம்
அவனோ அல்லன் செய்தவம் எல்லாம் அடுகின்றான்
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்
இவனோ அவ்வேத முதல் காரணன்
-கம்பராமாயணம்

எனையே கதியென்று சரணம் புகுந்தவர்
வாழ்க்கைக்கு அதுமுதல் நானே பொறுப்பு
குற்றங்கள் யாவையும் பொறுப்பேன் துடைப்பேன்
நன்மைகள் யாவையும் ஒவ்வொன்றாய் கொடுப்பேன்
-ஸ்ரீராமர்

ஸ்ரீராம காயத்ரி

ஓம் தாசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரச்சோதயாத்

ஸ்ரீ சீதா காயத்ரி

ஓம் ஜனகபுத்ரியை வித்மஹே
ராமப்ரியாய தீமஹி
தந்நோ சீதா ப்ரச்சோதயாத்

ராம பாத காயத்ரி

ஓம் ராமபாதாய வித்மஹே
ஸ்ரீராமபாதாய தீமஹி
தந்நோ ராமபாதப் ப்ரச்சோதயாத்

வேதசாரம் கீதையே
கீதைசாரம் கிருஷ்ணரே
கிருஷ்ணர்பாதம் பற்றவே
கிருஷ்ணசாரம் கிட்டுமே

கிருஷ்ணசாரம் ராமரே
ராமர்சாரம் நாமமே
ராமநாமம் சொல்லவே
ராமர்பாதம் கிட்டுமே

ராமர்பாதம் கிட்டினால்
நன்மையாவும் கொட்டுமே
நன்மையாவும் கொட்டினால்
நன்மையாவும் கிட்டுமே

நன்மையாவும் என்கையில்
அளவு ஒன்றும் இல்லையே
அளவொன்றும் இன்றியே
நன்மையாவும் கிட்டுமே

ராமாயணம் விவசாயம்
பாகவதம் அறுவடை

ஸ்ரீராமராம ராமேதி
ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே!
-சிவபெருமான்

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம வென்ற யிரண்டெழுத்தினால்
-கம்பர்

நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே

-கம்பர்

மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை ராம எனும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான்
-கம்பர்

நன்மை நேர்மை இனிமை எளிமை
கனிவு வலிவு பணிவு துணிவு
வீரம் வீரியம் வல்லமை வெற்றி
ஞாபகம் நம்பகம் நாயகம் நாணயம்
ஈரெட்டு குணங்களும் இன்னும் பலவும்
ஈரெழுத்து மந்திரம் சீராமம் தந்திடும்

அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்

கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்

நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
-சிவவாக்கிய
ர்

போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே
-சிவவாக்கியர்

ஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாதனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே!!!
-சிவவாக்கியர்

காரகார கார கார காவல் ஊழி காவலன்
போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே!!
-சிவவாக்கியர்

நீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான்
வீடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராமராம ராம என்னும் நாமமே !!!
-சிவவாக்கியர்

ஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை
நாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே!
-சிவவாக்கியர்

ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே!
-
சிவவாக்கியர்

காராய வண்ண மணிவண்ண கண்ண
கன சங்கு சக்ர தரநீள்
சீராய தூய மலர்வாய நேய
சீராம ராம எனவே
தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க
தாமோதராய நம ஓம்
நாராயணாய நம வாமனாய
நம கேசவாய நமவே!
-வள்ளலார்

திருமாலுக்கு அடிமை செய்
அரனை மறவாதே
-ஔவைப் பாட்டி

டில்லிக்கே ராஜான்னாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
பட்டப்படிப்பு படிச்சிருந்தாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே

ஹரியாரைப் பணியச் சொன்ன
நல்ல வார்த்தை தட்டாதே
ஹரனாரை நினைக்கச் சொன்ன
அன்பு வார்த்தை தட்டாதே

சிவத்தை தின்று சிவத்தை பெருக்கும்
சிந்தைமிகு மானிடா
சிவத்தில் நின்று சிவத்தைக் கண்டு
சிவத்தை மறப்பதேனடா?

ராம்ராம்

அம்மா பரமேஸ்வரியை
அடிபணிந்து போற்றுகிறேன்
அப்பா சதாசிவத்தை
அன்புடனே போற்றுகிறேன்
குருநாதர் கிருஷ்ணரை
கும்பிட்டே போற்றுகிறேன்
எந்தெய்வம் ராமரை
என்னுயிராய் போற்றுகிறேன்

கணிதம் தந்து அன்பு செய்த
ஈவ்ளின் மிஸ் போற்றுகிறேன்
தட்டித் தந்து தமிழ் தந்த
துரைராஜ் சார் போற்றுகிறேன்
அடித்தாலும் அன்பான
ராபர்ட் சார் போற்றுகிறேன்
என்னிலும் ஓளி கண்ட
க்ஸேவியர் சார் போற்றுகிறேன்

இன்னும் பல ஆசான்கள்
எத்தனை பேர் என் வாழ்வில்
அத்தனை பேரையும்
அடி பணிந்து போற்றுகிறேன்!

சுவாமி சின்மயானந்தர்

சுவாமி சின்மயானந்தர்
என் கீதாச்சார்யார்

நன்றியுரை

சின்மையா னந்தரை சிந்தையுடன் நினைக்கிறேன்
என்றுமவர் புகழோங்க இறைவனை கேட்கிறேன்
அவரேற்றிவைத்த கீததீபம் சூரியனாய் மாறியது
நாடிவரும் நல்லவர்க்கு ஞானமொழி கூறியது

அவரென் இதயத்தில்
போட்ட விதை
மரமாகி நின்றது

இறைவனுக்காய்
பலபூக்கள்
நறுமணமாய்
பூத்தது

மனிதருக்கும்
பலகனிகள்
சுவைசத்தாய்
தந்தது

கிருஷ்ணரே அம்மரத்தை
நீரூற்றி வளர்த்தது
ராமரே அம்மரத்துக்கு
உரமாக இருந்தது

அவரைக் காணாத என் கண்கள்
என் குற்றம் செய்ததோ
அக்குற்றத்தை கரைத்திடவே
கண்ணீரை பெய்ததோ

அழுவது குற்றமென்று
அறிவுரைத்த குருவுக்கு
அழுகையில் சொட்டுகின்ற
கண்ணீரே காணிக்கை!

சுகம்பெற்ற இதயத்தின்
சோகமில்லா காணிக்கை
நன்றியால் பெருகியதால்
குற்றமில்லா காணிக்கை!

சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!!

Sunday, March 30, 2014

மகாத்மா காந்தி பரசுராமரே!




 























ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித பாவன சீதா ராம்

என்பது எனக்கு எப்பொழுதுமே மிக பிடித்த ராம நாம ஜபம்.

அதே போல ஸ்ரீராமர் ஸ்ரீகிருஷ்ணர் ஆகிய இவ்விருவருக்கும் அடுத்தபடியாக எனக்கு மிக பிடித்தமான இருவர் மஹாத்மா காந்தி மற்றும் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் ஆவர்.

ரகுபதி ராகவ ராஜா ராம் என ஜபிக்கும் பொழுது ஸ்ரீராமரின் அறிவு, வீரம், சத்தியம், ஒழுக்கம், கட்டுப்பாடு, ஆற்றல், புத்திக்கூர்மை, வைராக்யம், உறுதி, வலிமை ஆகிய பண்புகள் என் உள்ளத்தை நிறைக்கும்.

பதித பாவன சீதா ராம் என ஜபிக்கும் பொழுது ஸ்ரீராமரின் கருணை, மென்மை, பணிவு, விட்டுக்கொடுக்கும் மனம், வள்ளல் குணம், பாசம், அடக்கம், அக்கறை, தாயுள்ளம், இரக்கம், தன்னலமற்ற சிந்தனை ஆகிய அருங்குணங்கள் என் உள்ளத்தை கரைக்கும்.

ஆக ரகுபதி ராகவ ராஜா ராமர் என் மூளைக்கு உத்வேகம் அளிப்பவராகவும் பதித பாவன சீதா ராமர் என் இதயத்தை இளக செய்பவராகவும் எப்பொழுதும் இருந்திருக்கிறார்.

ராஜா ராமரும் மஹாத்மா காந்தியும்:
---------------------------------------------------

இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் ராஜாராமர் என் மூளைக்கு எந்த உத்வேகத்தை அளித்தாரோ அதே உத்வேகத்தை அதே பாணியில் என் மூளைக்கு மஹாத்மா காந்தியும் அளித்தார்.

உதாரணத்திற்கு ஸ்ரீராமர் சத்தியத்தின் மீது கொண்டிருந்த பிடிப்பு. அதே பிடிப்பு மஹாத்மா காந்தியும் சத்தியத்தின் மீது கொண்டிருந்தார். இது என் அறிவிற்கு மிகுந்த தெளிவை ஏற்படுத்தியது.

இதே போல அஹிம்சை. மஹாத்மா காந்தியாவது எதிரியின் கையில் வலிமையான ஆயுதங்கள் இருக்க நம்மிடம் அவ்வளவு வலிமையான ஆயுதங்கள் இல்லாத நிலையில் அஹிம்சையை கைக் கொண்டிருந்தார். ஆனால் ஸ்ரீராமரோ தன் கையில் ஆயுதம் இருந்த நிலையிலும் கூட, தன் எதிரி தனக்கு முன்பாக நிராயுதபாணியாக நின்றிருந்த நிலையிலும் கூட அஹிம்சையை கடைப்பிடித்தார்.

இந்த இடத்தில் ஸ்ரீராமர் கொன்ற அரக்கர்கள் பற்றி கேள்வி எழும். ஸ்ரீராமர் செய்த வதங்கள் யாவும் வதையுண்டவர்கள் அதற்கு பிறகு தர்மத்திற்கு எவ்வகையிலும் உதவ மாட்டார்கள் என்கிற நிலையிலேயே நிகழ்ந்தன. அதுவும் அவர்களிடம் அன்பும் நல்வார்த்தைகளும் இனி எடுபடாது என்கிற நிலையிலேயே நிகழ்ந்தன.

இது எனக்கு அஹிம்சையின் நுட்பங்களை புரிந்து கொள்ள உதவியது. உதாரணத்திற்கு நான் இரவில் தனியான சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது என் கழுத்தில் ஒருவன் கத்தி வைக்கிறான் என்றால், அங்கே அஹிம்சை என்பதை நான் கைக் கொள்ள முடியாது.

ஸ்ரீராமரிடம் வீரத்திற்கும் முரட்டுத்தனத்திற்கும் உள்ள வித்தியாசத்தை கற்றேன் என்றால் மஹாத்மா காந்தியிடம் அஹிம்சைக்கும் பலவீனத்திற்கும் உள்ள வித்தியாசத்தை நான் கற்றேன்.

சீதா ராமரும் ராமகிருஷ்ண பரமஹம்சரும்:
------------------------------------------------------------

சீதா ராமர் என்பது ஸ்ரீராமருடைய மென்மையான குணங்களை குறிக்கும். பதித பாவன சீதா ராம் என ஜபிக்கும் பொழுது இதயம் இளகும். ஸ்ரீராமரிடம் நம் இதயத்தை இளகச் செய்யும் பண்புகள் ஏராளமாக கொட்டிக் கிடக்கின்றன.

ஸ்ரீராமர் பிறந்தவுடன் அவர் செய்த முதல் காரியமே அழுதது தான். அந்த அழுகை சாதாரண அழுகை கிடையாது. அது சர்வ உலகங்களையும் ஆளூம் இறைவன் இந்த மண்ணில் மனிதனாக பிறந்து சக மனிதர்களிடம், 'நானும் உங்களைப் போன்றவனே, என்னையும் உங்களில் ஒருவனாக ஏற்றுக் கொள்ளுங்கள்' என்று விண்ணப்பித்த அழுகையாகும். இது தான் ஸ்ரீராமர். உதவும் பொழுது கூட பணிந்து உதவும் குணம். கேட்கட்டும் கொடுக்கலாம் என காத்திராமல் தேவையறிந்து வாரி வழங்கும் தன்மை. ஒருவனை புண்படுத்திவிட்டால் அவன் நம்மிடம் வந்து உதவி கேட்க விரும்ப மாட்டானே என்கிற அக்கறை. ஒருவனை வெல்வதென்பது அவனைவிட சிறப்பானவனாக இருப்பதிலில்லை அவன் இதயத்தில் இடம்பிடிப்பதே என்கிற கொள்கை.

ஸ்ரீராமர் செய்யும் ஒவ்வொரு காரியமுமே நம் இதயத்தை இளக செய்வதாகவே இருக்கும். எப்படி சந்திரனை பார்த்தால் நம் கண்களும் மனமும் குளிர்கின்றனவோ அதே போல ஸ்ரீராமச்சந்திர பிரபுவை நினைத்தாலே நம் இதயம் குளிர்ந்து விடும்.

தான் தாக்கப்படுவதை பற்றி கூட கவலைப் படாமல் தாடகை ஒரு பெண் என்பதற்காக அவளை தாக்க தயங்கி நின்றதாகட்டும், தனக்கு ராஜ்ஜியம் கொடுக்கப்பட்டுவிட்ட நிலையில் கூட தன் தந்தைக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தாமல் வனம் செல்ல முடிவு செய்ததாகட்டும், அன்னை சீதை உடன் வருவதாக சொன்ன பொழுது அதை மறுத்து சொன்ன வார்த்தைகளில் ஆகட்டும், பின்னர் அன்னை சீதையை உடன் வர சம்மதித்த அந்த வாத்சல்யத்தில் ஆகட்டும்... ஸ்ரீராமர் செய்த ஒவ்வொரு செயலும் நம் இதயத்தை இளகச் செய்யும் செயல்களே......ஸ்ரீராமரிடம் ராஜா ராமரை விட சீதா ராமரையே நாம் அதிக அளவில் தரிசிக்க முடியும்......

சீதா ராமரிடம் இருக்கும் இத்தகைய மென்மையான பண்புகள் அனைத்தையுமே நான் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் கண்டேன். எப்பொழுதெல்லாம் ராமகிருஷ்ண மடம் சென்று அவர் திருவுரு முன்பாக அமர்கிறேனோ எப்பொழுதெல்லாம் ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகளை படிக்கிறேனோ அப்பொழுதெல்லாம் சீதா ராமரை நினைக்கும் பொழுதெல்லாம் என் இதயம் எப்படி இளகுமோ அப்படி ஸ்ரீராமகிருஷ்ணரை நினைத்தும் என் இதயம் இளகும். அப்பொழுதே என்னால் இவ்விருவருமே ஒன்றே போன்ற சக்திகள் தான் என்பதை என்னால் உணர முடிந்தது.

ஸ்ரீராமரின் அறிவு தான் மகாத்மா காந்தியாகவும் ஸ்ரீராமரின் அன்பு தான் ராமகிருஷ்ண பரமஹம்சராகவும் பிறந்து விட்டதோ என நினைத்திருக்கிறேன்.

இதையெல்லாம் உணர்ந்ததாலேயே 2008-ல் இவ்வலைதளம் துவங்கிய பொழுது... ஸ்ரீகிருஷ்ணரின் சிஷ்யன், ஸ்ரீ ராமரின் பக்தன், மஹாத்மா காந்தியின் ரசிகன் சுவாமி ராமகிருஷ்ணரின் பிள்ளை என பதிவு செய்தேன். ஏனென்றால் இந்நால்வரை நினைக்கும் பொழுதும் என் இதயத்தின் உணர்வுகள் ஒன்றே. என் உடம்பில் நிகழும் சக்திநிலை மாற்றங்களும் ஒன்றே.

பரசுராமரின் மறு அவதராங்கள்:
--------------------------------------------
பிறகு அந்த எண்ணங்களை விட்டு ஸ்ரீராமரை வழிபடுவதில் கவனம் செலுத்தி வந்திருக்கிறேன். இப்படியிருக்கையில் கடந்த இரண்டு வாரங்களாக எனக்கு ஒரு புதிய தெளிவு ஏற்பட்டுள்ளது. அது யாதெனின்:

பரசுராமரே ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சராகவும் மகாத்மா காந்தியாகவும் அவதாரம் செய்திருக்கிறார்.

இப்படி நான் சொல்வதற்கான காரணங்கள்:

1.பரசுராமர் அடிப்படையில் ஓர் அந்தணர். பின் சத்ரியராக மாறியவர். ஆக அவருக்குள் இருவேறு வினைகள் இருந்திருக்கின்றது. இந்த இருவினைகளுமே எதிரெதிர் தன்மையுடைய வினைகள். ஒருவினை சத்துவ குணத்தால் நிறைவேற்றப்பட வேண்டிய வினை. மற்றொன்று ரஜோ குணத்தால் நிறைவேற்றப்பட வேண்டிய வினை. இங்கேயே இரண்டு பிறப்புகளுக்கான விதை இருக்கிறது.

2.இப்படி இருக்கும் பொழுது அவருக்கு இப்படியும் அல்லாமல் அப்படியும் அல்லாமல் போனதில் வருத்தங்கள் இருந்திருக்கும். இது இயற்கையே. அதனாலும் அவருக்கு மறுபிறவி எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதை நாம் உணரலாம்.

3. பரசுராமர் ஸ்ரீராமரை சந்தித்த பொழுது ஸ்ரீராமரை போன்ற வீரனாக நாம் இல்லாமல் போய் விட்டோமே என்கிற வருத்தம் நிச்சயமாக இருந்திருக்கும். அது ஸ்ரீராமரிடம் தோற்றுவிட்டதால் ஏற்பட்ட வருத்தமல்ல...ஸ்ரீராமரை போல கோபம் கொள்ளாமல், எதிரியை வெறுக்காமல், பெருமித உணர்வின்றி ஆயுதத்தை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தும் அந்த தன்மை. இந்த குணத்தைத் தான் ஸ்ரீராமரின் வீரத்திற்கே அழகு சேர்க்க கூடிய குணமாகவும் ஸ்ரீராமரருடைய தனித்தன்மையாகவும் அறிஞர்களும் ஞானிகளும் போற்றுகிறார்கள்.

இந்த குணத்தை கண்டுவிட்டு தான் பரசுராமர் ஸ்ரீராமரிடம் பணிகிறார். விடைபெறுகிறார். ஆனால் அவரால் ஸ்ரீராமரை மறக்க முடியவில்லை. வீரம் என்கிற துறையில் இவர் செய்யாத சாதனைகள் இல்லை. தனக்கு நிகராக இன்னொரு வீரன் இல்லை என்கிற பெருமிதத்தோடு இந்த பூமியையே பல முறை வலம் வந்தவர். அசகாய சூரனாகவே எல்லா யுத்தங்களையும் வென்றவர். அப்படிப் பட்ட பரசுராமர் ஸ்ரீராமரிடம் கண்டு வியந்தது ஆயுதம் ஏந்தும் பொழுதும் துளி வெறுப்பின்றி பதட்டமின்றி கர்வமின்றி ஒரு சவரத் தொழிலாளி சவரக்கத்தியை பிடிப்பது போல ஸ்ரீராமர் வில்லை ஏந்தி நின்ற அந்த நிலை தான்.

அப்படி ஸ்ரீராமர் நின்ற அத்திருக்கோலமே பரசுராமருக்கு பாடமாக படமாகவும் அவர் உள்ளத்தில் பதிந்து விட்டது. அவர் ராஜாராமரின் வீரத்தையும் அறிவையும் சீதாராமரின் கனிவையும் பணிவையும் தியானித்தவண்ணம் அதன் பிறகு வாழ்ந்திருக்கிறார்.

பரசுராமர் ராமகிருஷ்ணராகவும் காந்தி மகானாகவும் அவதரித்தல்:
---------------------------------------------------------------------------------------------

பரசுராமர் தன் அந்தண வினைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக ராமகிருஷ்ணராகவும் சத்ரிய வினைகளை நிறைவேற்றிக் கொள்ள காந்தி மகானாகவும் இரட்டை அவதாரங்கள் எடுக்கிறார்.

அவருடைய அந்தண வினைகள் ஸ்ரீராமகிருஷ்ணராக அவதரித்தது. அவருடைய அந்தண கடமைகளுக்கு துணை நிற்பதற்காக சரஸ்வதியின் அம்சமாக அன்னை சாரதா தேவி உடன் வருகிறார். ஏன் சரஸ்வதி தேவியின் அம்சமாக அன்னை சாரதை வர வேண்டும் எனின் அந்தணர் என்பவர் பிரம்மாவின் அம்சம். அவருக்கு துணையாக சரஸ்வதியின் அம்சமானவர் வருகிறார்.

அவருடைய சத்ரிய வினைகள் மகாத்மா காந்தியாக அவதரித்தது. வீரத்தின் அம்சமாக மகாத்மா காந்தி பிறந்ததாலேயே கஸ்தூரி பாய் அவருக்கு துணையாக வருகிறார். யுத்தத்திற்கு செல்லும் வீரர்களுக்கு தான் கஸ்தூரி திலகத்தை இடுவார்கள். ஆக வீரமே மகாத்மா காந்தியாக அவதரித்தது என்றும் அவருக்கு துணையாக வெற்றியே கஸ்தூரி பாயாக பிறந்ததென்றும் நாம் உணரலாம்.

மகாத்மா காந்திக்கும் ராமகிருஷ்ணருக்கும் உள்ள ஒற்றுமைகள்:
-------------------------------------------------------------------------------------------

1. உடலமைப்பு:
----------------------

இருவரின் உடலமைப்பே இவ்விருவருக்கும் இருக்கும் மிகப் பெரிய ஒற்றுமையாகும். இருவருமே மிகக் குறைவாக உண்ண கூடியவர்கள். அப்படியிருந்தும் இருவருமே மிகுந்த வலிமையுடைவர்களாக திகழ்ந்தார்கள்.


2.போதனைகள்:
-----------------------
இருவருடைய போதனைகளுமே ஒன்று தான். அவை

*அனைத்து மதங்களும் நல்ல மதங்களே என்பது.
*இன மொழி மத ஜாதி வண்ண தேச பேதமின்றி அனைவரும் இறைவனின் குழந்தைகளே என்பது.
*இருவருமே அஹிம்சாவாதிகள்.

3. ராமபக்தி:
-----------------

இருவருக்குமே 'ரகுபதி ராகவ ராஜாராம்! பதித பாவன சீதா ராம்!!' என்ற வாசகத்தில் இருக்கும் நாட்டம்.

மகாத்மா காந்தியடிகளின் ராமபக்தி:
-------------------------------------------------
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித பாவன சீதா ராம்
ஈஸ்வர் அல்லாஹ் தேரே நாம்
சப்கோ சன்மதி தே பகவான்

என்பது மகாத்மா காந்தி அவர்களுடன் இரண்டற கலந்து விட்ட வரிகளாகும். பென் கிங்க்ஸ்லீ ஆஸ்கார் வாங்கிய பொழுது ஆஸ்கார் மேடையில் இந்த வரிகளுக்கான இசை ஒலித்தது. ரிச்சர்ட் அட்டென்பரோ எம்மி விருது வென்ற பொழுதும் பின்னணியில் இவ்வரிகளுக்கான இசையே ஒலித்தது. இப்படியாக ராமநாமத்தை அயல் நாட்டு மேடைகளில் எல்லாம் ஒலிக்க செய்த மகான், ஸ்ரீராமபக்தர், ஆஞ்சநேயருக்கு பிறகு ஸ்ரீராமருக்கு புகழ் சேர்த்துக் கொண்டிருக்கும் ராமதாசர் அண்ணல் காந்தியடிகள் என்பதை அனைவரும் உணர வேண்டும். இந்த தருணத்தில் அவர் பாதங்களை போற்றி வணங்குகிறேன்.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் ராமபக்தி:
--------------------------------------------------------
ராமகிருஷ்ண மடங்களில் ஏகாதசி தோறும் மாலையில் ஸ்ரீராமர் படத்தை வைத்து ராம நாம சங்கீர்த்தனம் செய்கிறார்கள். அதில் கடைசியாக வரும் இரு வரிகள் 'ரகுபதி ராகவ ராஜா ராம்! பதித பாவன சீதா ராம்!' என்பது தான்.

இதில் என்ன விசேஷம் என்றால்...ஏகாதசி அன்று எந்த பெருமாள் படத்தை வேண்டுமானாலும் வைத்து வழிபடலாம். தசாவதாரங்கள் இருக்க அங்கே ராமர் படத்தை தான் வைக்கிறார்கள். :)

ராமருக்கும் எவ்வளவோ பாடல்கள் இருக்கின்றன... ஆனால் 'ரகுபதி ராகவ ராஜா ராம்! பதித பாவன சீதா ராம்!' என முடியும் அந்த பாடலை தான் அங்கே பாடுகிறார்கள்.

இதிலிருந்து அவ்விருவரின் ஆன்மாவும் ஒரே குரலில் ஒலித்தது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

4. இனிப்புப் பிரியம்:
---------------------------

இருவருக்குமே இனிப்பு வகைகளில் நாட்டம் இருந்திருக்கிறது. இருவர்  வாழ்க்கையிலுமே அதிகம் சக்கரை தின்னும் சிறுவனுக்கு அறிவுரைக்கும் படி அச்சிறுவனின் தாயார் அவனை அழைத்து வர....அதற்கு இவ்விருவருமே சில நாட்கள் கழித்து வரும்படி கூறியதாகவும், காரணம் கேட்டதற்கு தத்தம் இனிப்புண்ணும் பழக்கத்தை தாங்கள் குறைத்துக் கொண்ட பின்னரே அவர்கள் அறிவுரை கூற இயலும் என்று கூறியதாகவும் கதை உள்ளது.  இதைப் பற்றி நான் கூகுளில் தேடிய பொழுது, அதெப்படி இருவர் வாழ்க்கையிலும் அதே சம்பவம் நடக்கும்? யாரோ ஒருவருடைய நேசர்கள் பொய் சொல்லி விட்டார்கள், கதை திருடி விட்டார்கள் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

காந்தியவாதிகளும் சரி ஸ்ரீராமகிருஷ்ண சிஷ்யர்களும் சரி இவ்விருவருக்குமே பொய் சொல்லி தத்தம் தலைவர்களின் புகழை பரப்ப வேண்டிய அவசியம் கிடையாது. அப்படிப்பட்ட பழக்க வழக்கங்களும் அவ்விரு மகாங்களின் வழியில் வந்தவர்களுக்கு வராது. தத்தம் செயல்களாலேயே தனிப்புகழுடன் விளங்கும் இவ்விருவரின் புகழையும் பரப்ப நினைப்பவர்கள் எதற்காக ஒரு பொய்யான கதையை சொல்லி இவர்கள் புகழை பரப்ப வேண்டும்?

ஆகையால் இந்தக் கதை இருவரின் வாழ்க்கையிலுமே நடந்தது உண்மையே என நாம் முடிவு செய்து கொள்ளலாம்.

அவ்விருவரும் ஒரே நபருடைய இருவேறு பிம்பங்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம்.

இப்பொழுது பரசுராமர் அதிக இனிப்பு வகை உண்ணும் பழக்கமுள்ளவரா என்கிற கேள்வி எழுகிறது?

அதற்கும் நிச்சயமாக சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. பரசுராமரோ மகா கோபக்காரர். அதனால் அவரிடம் நெருங்க துணிந்த சக முனிவர்கள் யாரேனும் 'எப்பொழுதும் உர்ரென்று இராதீர்...கொஞ்சம் இனிப்பு வகைகளை வாயில் போட்டுக் கொள்ளும் அப்பொழுது தான் உங்களால் ஸ்ரீராமரை போல இனிமையானவராக மாற முடியும்' என கூறியிருக்கலாம். அதை பரசுராமரும் சிரத்தையுடன் பின்பற்றியிருக்கலாம். கொஞ்சம் நகைச்சுவையுடன் கூறினாலும் நான் சொல்லும் கருத்து விளையாட்டானதல்ல. இனிப்பு வகைகளை நாம் உண்ணும் பொழுது நாமும் இனிமையானவர்கள் ஆகிறோம் என்பது உண்மையே. இதை எவரும் அனுபவபூர்வமாகவே தெரிந்து கொள்ளலாம். அதை பரசுராமர் தன் கோபத்தை குறைத்துக் கொள்ள பயன்படுத்தியிருப்பார் என்பது என் கருத்து.


5.ராமகிருஷ்ணரின் தவமும் காந்தியின் யுத்தமும்:
----------------------------------------------------------------------

ராமகிருஷ்ண பரமஹம்சர் காளி பக்தர். அவர் சிறுவயது முதல் காளி கோவிலில் பூசாரியாக இருந்தவர். காளி தரிசனம் பெற்றவர்.முப்பது ஆண்டுகளுக்கு மேலாக காளி மாதாவை உபாசனைகளாலும் பூஜைகளாலும் வழிப்பட்டவர். மேலும் அவர் கடுமையான பல விரதங்களை மேற்கொண்டவர். அவர் கோதுமை உண்பதை கூட முற்றிலுமாக தவிர்த்தவர். அவர் உணவெடுத்துக் கொண்டாலும் அதிக பட்சம் ஒரு வாய் அல்லது இரண்டு வாய் உணவுதான். இப்படியெல்லாம் அவர் கடினமாக தவம் செய்தார். அவர் வழிபடாத தெய்வம் என்று யாரும் கிடையாது.

இவ்வளவு கடுமையான தவம் செய்தவர் உலகளாவிய சாதனைகள் எதுவும் செய்யவில்லை.விவேகானந்தரை உருவாக்கித் தந்தது, இன்னும் அவர் போல பல ஞானிகளை உருவாக்கித் தந்தது, அமுத மொழிகள் போன்ற புத்தகங்கள் தந்தது, கல்பவிருக்ஷமாக இருந்து அருள்பாலித்தது, இவையெல்லாம் சாதனைகள் தான் என்றாலும் அவர் செய்த அளப்பரிய தவத்தை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இவை மிக சிறிய சாதனைகளாகவே எனக்கு படுகின்றன.

மறுபுறம் மகாத்மா காந்தி அவர்களை பார்க்கும் பொழுது அவர் தவம் என்று எதுவுமே செய்யவில்லை. அவர் ராம நாமம் ஜெபித்தார் என்றாலும் அவர் செய்த சாதனைக்கு அது மிக சிறிய தவமே.

இப்பொழுது நாம் ராமகிருஷ்ணரின் தவத்தையும் மகாத்மா காந்தியின் சாதனையையும் இணைத்துப் பார்த்தால் தான் அந்த தவத்திற்கு ஏற்ற வெற்றி இதுவென்பதையும் இந்த வெற்றிக்கு ஏற்ற தவம் அதுவென்பதையும் நம்மால் ஏற்றுக் கொள்ளமுடியும்.

மகாத்மா காந்தி அவர்களுக்கு 17 வயது ஆகியிருந்த பொழுது ராமகிருஷ்ணர் தன் தவ வாழ்வை நிறைவு செய்தார் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கையில் ராமகிருஷ்ணரே தன் தவ வலிமையை மகாத்மா காந்தி அவர்களுக்கு கொடுத்து மகாத்மா காந்தி அவர்களின் வெற்றிக்கு வழிவகுத்தார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

மகாத்மா காந்தியின் வெற்றியும் அத்தகையதாகவே இருக்கிறது. இவர் ஒருவருடைய தைரியம் ஒரு நாட்டையே பற்றிக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கு வெகு நிச்சயமாக ராமகிருஷ்ணருடைய தவ வலிமைக்கு இணையான தவ வலிமை தேவை. மேலும் அன்னை காளியே தைரியத்தை தரும் கடவுளாகவும் இருக்கிறார் என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இந்தக் காரணங்களால் தவத்திரு ராமகிருஷ்ணரின் தவமும் மாவீரர் மகாத்மா காந்தியின் வீரமுமே நம் இந்திய திருநாட்டிற்கு சுதந்திரத்தை பெற்றுத் தந்தன என உறுதியாக கூற முடியும்.

6.மகாத்மா காந்தியின் இரு-கைப் பழக்கம்:
--------------------------------------------------------

பரசுராமரே மகாத்மா காந்தி என நான் நம்புவதற்கு மிக முக்கியமான காரணம் மகாத்மா காந்தியின் இருகை பழக்கம். அவர் இரு கைகளையும் ஒன்றே போல பயன்படுத்தும் வல்லமை பெற்றிருந்தார். இது மனிதர்களிடம் மிக மிக அரிதாக காணப்படும் ஒரு திறமையாகும்.

மகாத்மா காந்தி பரசுராமரின் அவதாரம் இல்லை என வைத்துக் கொண்டு சிந்தித்தால் மகாத்மா காந்தியின் இருகைப் பழக்கத்தை எண்ணி வியக்கலாம் அவ்வளவே.

மாறாக அவரை பரசுராமரின் அவதாரம் எனக் கருதினால் அவர் பரசுராமராக இருந்த பொழுது ஆயுதப் பயிற்சியிலேயே இத்திறமையை வளர்த்துக் கொண்டார் என்பது நமக்குப் புரியும். ஏனென்றால் பரசுராமர் போன்ற வீரர்கள் ஒரே சமயத்தில் இரு கைகளையும் வெவ்வேறு இயக்கங்களுக்கு உட்படுத்தும் அளவிற்கு பயிற்சி செய்து வைத்திருப்பார்கள். எந்த ஒரு ஆயுதத்தையும் இரு கைகளிலும் சம லாவகத்தோடு பயன்படுத்துவது, ஒரே சமயத்தில் இரு வகையான ஆயுதங்களை இருவேறு சுழற்சிகளில் இரு கைகளிலும் பயன்படுத்துவது, ஒரு கையிலேயே உள்ளங்கையில் ஒரு பெரிய ஆயுதத்தையும் விரல்களுக்கு நடுவில் குட்டி ஆயுதங்களையும் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு பயிற்சிகளை திறம்பட செய்திருப்பார்கள்.

இந்த பயிற்சிகளையெல்லாம் அண்ணல் காந்தியடிகள் தாம் பரசுராமராக இருந்த பொழுது திறம்பட செய்து பழகியிருந்ததனாலேயே பிற்பிறவியில் இருகை லாவகம் கொண்டவராக திகழ்ந்தார்.

இது போல பகவான் ராமகிருஷ்ணரும் ஆயுதம் பிடிக்கும் முறை பற்றிய ஒரு சிறு உபதேசத்தை சுவாமி விவேகானந்தர் மூலமாக வழங்கியிருக்கிறார். ஒருவரிடம் கூர்மையான பொருட்களை கொடுக்கும் பொழுது கூரான முனையை நம் பக்கம் வைத்துக் கொண்டு கொடுக்க வேண்டும். அதுவே பக்குவத்தின் அறிகுறி.



7.மகாத்மா காந்தியின் நுட்பமான வியூகம்:
-----------------------------------------------------------

 மகாத்மா காந்தியின் வெற்றி வியூகம் என்பது இன்று வரையிலும் எவரும் புரிந்து கொண்டதாக எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் வரலாற்று ஆசிரியர் ஒருவர் காந்தியவாதிகள் மேற்கொண்ட அஹிம்சை போராட்டத்தினால் எந்த பின்விளைவும் இல்லை. ஆங்கிலேயர்கள் நினைத்திருந்தால் இன்று வரை கூட நம்மை ஆண்டிருக்கலாம் என கூறினார்.

ஆக வரலாற்று புத்தகங்களிலேயே இவ்வுண்மை பதிவாக வில்லை என்பது நன்றாக தெரிகிறது.

அது மட்டுமில்லாமல் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கியதற்கான உண்மையான காரணங்கள் எங்குமே பேசப் படுவதில்லை.
உண்மையான காரணங்கள் தெரியாததனாலேயே பலரும் பல தவறான காரணங்களை கூறித் திரிகிறார்கள்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கியதன் உண்மையான காரணம்:
----------------------------------------------------------------------------------------------------
மகாத்மா காந்தி ஒத்துழையாமை என்னும் ஆயுதத்தை கொண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்தார். இது அனைவரும் அறிந்ததே. இதனால் ஆங்கிலேயர்களுக்கு இரண்டு அடிகள் விழுந்தன.
*ஒன்று வருவாய்த் தடை என்பது.
*மற்றொன்று பண விரயம் என்பது.

வருவாய்த்தடை என்பது
* இந்தியர்கள் வரி செலுத்த மறுத்ததாலும்.
*ஆங்கிலேயர்கள் விற்ற பொருட்களை வாங்க மறுத்ததாலும் ஏற்பட்டது.

பண விரயம் என்பது
*அரசு ஊழியர்களுக்கான சம்பளம். அரசாங்க அமைப்பில் உச்சபட்ச பதவியில் இருந்து கடைநிலை ஊழியர் வரை அனைவருக்குமான சம்ளத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
*அரசாங்க அலுவலங்கள் இயங்குவதற்கு தேவையான இதர செலவுகள்.
*சிறையிலிருந்த காந்தியவாத போராளிகளுக்கு தேவையான மருத்துவ செலவுகள்.
*அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய உணவுக்கான செலவுகள்.

இதனால் ஆங்கிலேயர்களுக்கு இந்தியா லாபகரமான நாடாக இல்லாமல் போய்விட்டது. அதனால் அவர்களும் வெட்கத்தை கக்கத்தில் வைத்தபடி காயத்தில் கைவைத்து மறைத்தபடி....நல்ல பிள்ளைகளாக நம் நாட்டிற்கு சுதந்திரம் கொடுத்து விட்டு விலகி சென்றார்கள். அண்ணல் காந்தியடிகளும் இது பற்றி விளக்கிச் சொல்லாமல் அவர்களுடைய கௌரவத்தைக் கூட காப்பாற்றிக் கொடுத்தார்.

ஆக இந்திய சுதந்திரம் என்பது ஆங்கிலேயர்கள் இந்தியர்களுக்கு போனால் போகட்டும் என்று கொடுத்த ஒன்று அன்று. அது மகாத்மா காந்தி என்னும் மாவீரர் வன்முறையால் அவர்கள் தொண்டைக் குழாயை நசுக்காமல் மென்முறையால் அவர்கள் வருவாய்க் குழாயை நசுக்கிப் பிடித்து, அவர்களை திணறடித்து அவர்களை சுதந்திரம் கொடுக்கும்படி கட்டாயப்படுத்தி நமக்கு பெற்றுத் தந்த சுதந்திரம். இப்படி ஒரு மதிநுட்பமான காய் நகர்த்தல் இதிகாச புராண வரலாற்று மற்றும் புனைவு கதைகளில் கூட காண கிடைக்காத காய் நகர்த்தலாகும்.

இதை புரிந்து கொள்ள முடியாத முட்டாள்களே காந்தி சுபாஷ் சந்திரபோஸை காட்டிக் கொடுத்து சுதந்திரம் வாங்கினார் என்று தங்கள் நாட்டின் வரலாற்றையே தன்மானமின்றி கொச்சைப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அஹிம்சை:
-----------------
இந்த போராட்டத்தில் அஹிம்சை என்பது மிகப் பெரிய பங்கு வகித்தது. அண்ணல் அஹிம்சையை போதித்தது மிக எளிமையான காரணத்திற்காகத் தான். நம்மவர்கள் ஆங்கில காவலர்களை தாக்க முற்பட்டால் ஆங்கில காவலர்களுக்கு நம்மவர்கள் மீது வன்முறையை உபயோகிக்க ஒரு காரணம் கிடைத்து விடும். அந்த காரணத்தை ஒரு போதும் அவர்களுக்கு நம்மவர்கள் கொடுத்து விடக் கூடாது என்பதில் அண்ணல் தெளிவாக இருந்தார். இப்பொழுது அவர்கள் வன்முறையை உபயோகித்தாலும் அது அவர்கள் மீதான குற்றமாகவே இருக்கும். இதனால் அவர்கள் நீதி மன்றங்களே அவர்கள் காவல் துறையை கண்டிக்க நேரிடும். இதனாலேயே அண்ணலின் அறப்போரை ஆயுதங்கள் பல இருந்தும் ஆங்கிலேயர்களால் ஒடுக்க முடியவில்லை.

இருநூறு ஆண்டுகளாக வியாபார நிறுவனமாக இருந்த பொழுதே பல்வேறு வீரர்களை ஆயுதப்போராட்டத்தில் சமாளித்து நின்ற ஆங்கிலேயர்களால் அரசாங்கமாக இருந்து கூட அண்ணலின் அகிம்சையை அசைக்கக் கூட முடியவில்லை. இது சாதாரண வெற்றியல்ல! இது இமாலய வெற்றி! வரலாற்றின் இதற்கு முன்பு எவரும் கண்டிராத வெற்றி.

அண்ணலின் உண்ணாவிரதங்கள்:
-----------------------------------------------

அண்ணலின் உண்ணாவிரதங்கள் யாவுமே தம் மீது அன்பு கொண்ட தொண்டர்கள் எல்லை மீறிய போது அதை தடுப்பதற்காக இருந்த உண்ணாவிரதங்களே அன்றி அவர் ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு உண்ணாவிரதமும் இருக்க வில்லை. ஒரே ஒரு முறை அவர் சிறையில் இருந்த உண்ணாவிரதம் கூட ஒத்துழையாமை என்கிற அடிப்படையிலேயே அணுகப்பட்ட உண்ணாவிரதமாகும். நம்மீது அன்பு கொண்டவர்களே நம் உண்ணாவிரதத்திற்கு இளகுவார்கள் என்பது அண்ணலுக்கு நன்றாக தெரியும் அதனாலேயே அவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக உண்ணாவிரதங்கள் இருக்கவில்லை. அவர் தம் படையை கட்டுக் கோப்பான ஒழுக்கத்தில் வைக்க உண்ணாவிரதங்களையும் ஆங்கிலேயர்களை வழிக்குக் கொண்டு வர உப்பு சத்தியாகிரகம் போன்ற நுட்பமான போராட்டங்களை பயன்படுத்தினார்.

அண்ணலின் போர்முறையின் சிறப்பம்சங்கள்:
-----------------------------------------------------------------

காந்திமகான் அவர்கள் போர் செய்ய ஆள் சேர்க்கிறேன், ஆள் சேர்க்க பணம் சேர்க்கிறேன், பணம் சேர்க்க நன்கொடை வேண்டும் உதவி வேண்டும் என்றெல்லாம் எங்கும் சென்று நிற்கவில்லை. அவர் இந்நாட்டின் பொது மக்களையே வீரர்களாக பயன்படுத்தினார்.

அவர் கையில் துப்பாக்கியும் வைத்துக் கொண்டு காட்டுக்குள்ளும் ஓடி ஒளிந்து திரிந்து வாழும் கோழையாக இருக்கவில்லை. சத்தியம் என்ற ஒன்றையே கவசமாக கொண்டு சாதூர்யம் என்ற ஒன்றையே ஆயுதமாக கொண்டு அன்பால் தன் பின்பால் திரண்ட கூட்டத்தையே படையாக கொண்டு ஆங்கிலையர்களை எதிர்த்து அதிர்ந்து கூட பேசாமல் வெற்றிக் கனியைப் பறித்தார்.

வெள்ளைக்காரன் ஊருக்குள் இருக்க இவர் காட்டுக்குள் சென்று ஒளிந்து கொண்டு பதுங்கி பதுங்கி நாட்டுக்குள் திருடனை போல சுற்றவில்லை. எங்கே இருக்கிறோம் என்பதை கூட வெளி உலகுக்கு தெரிவிக்க துப்பற்றவராக தைரியமற்றவராக அவர் இருக்கவில்லை. தம் தொண்டர்களை தலைவர் எங்கிருக்கிறார், எந்த நாட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறார், எந்த குழிக்குள் குப்புற படுத்திருக்கிறார், எந்த குகைக்குள் இருந்துகொண்டு உறுமிக் கொண்டு இருக்கிறார் எப்பொழுது பாயப்போகிறார் என்றெல்லாம் தலையைப் பிய்த்துக் கொள்ள வைக்கவில்லை. மாறாக வெள்ளைக்காரர்களை தன் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்குமோ என்று தலையை உடைத்துக் கொள்ள வைத்தார். வெள்ளைக்காரன் எந்த இடத்தில் நின்று அதிகாரம் செலுத்தினானோ அதே இடத்தில் அவன் ஆயுதங்களுக்கும் அடாவடிகளுக்கும் மிரட்டல்களுக்கும் அஞ்சாமல் நிராயுதபாணியாக காலூன்றி நின்று இது என் இடம் நீ வெளியேறு என்று கூறிய வீரம்....ஒரு சிங்கத்தின் வீரமே.....!

இந்த மண்ணில் தோன்றி ஆயுதம் ஏந்தி போராடிய எந்த வீரனையும் விட பல்லாயிர மடங்கு அண்ணல் காந்தியடிகள் ஒப்பற்ற வீரரே....... இதை புரிந்து கொள்ள தவறுபவர்கள் வீரம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களேயன்றி வேறில்லை......

அவர்கள் மக்கள் மத்தியில் வந்து நின்று முகம் காட்ட தைரியமில்லாமல் புதைகுழிகளில் பதுங்கி வாழும் கோழைகளையே வீரர்களென்று கொண்டாடிக் கொண்டிருப்பார்கள்....

 தமிழ்நாட்டில் இருக்கும் சில தறுதலைகள் புரிந்து கொள்ள வேண்டியது:
----------------------------------------------------------------------------------------------------

*மஹாத்மா காந்தி தம் மக்களை காப்பதாக சொல்லி துப்பாக்கியை ஏந்தவுமில்லை அந்த துப்பாக்கியை தம் மக்களை நோக்கியே திருப்பவுமில்லை.
*மஹாத்மா காந்தி பெண்கள் இடுப்பில் குண்டை வைத்து அனுப்பிவிட்டு அவர்கள் முந்தானைக்கு பின்னால் ஒளிந்து கொண்டு மாவீரனென்று மார்தட்டிக் கொள்ளவில்லை. அஹிம்சா வழிப் போராட்டத்தில் ஆப்ரிக்காவில் முதல் அடியை தாமே வாங்கி அப்போரட்டத்தை துவக்கி வைத்தார். கடைசி வரையிலும் தம் தொண்டர்கள் பட்ட எல்லா துயரங்களையும் தாமும் பட்டார். கடைசியாக மார்பில் மூன்று குண்டுகளை ஏற்று தாமே அந்த போராட்டத்தின் கடைசி அடியையும் ஏற்றுக் கொண்டார்.
*மஹாத்மா காந்தி பால் மணம் மறக்காத பாலகர்கள் கையில் துப்பாக்கியை கொடுத்து அவர்களை முன்வரிசையில் நிற்க வைத்து விட்டு பாதாள பங்களாவில் பதுங்கும் புலி என்கிற பெயரில் பதுங்கிக் கொண்டிருக்கவில்லை.
*நான் இப்பொழுது பதுங்கும் புலியாக இருக்கிறேன் இதோ பாய்கிறேன் பார் அதோ பாய்கிறேன் பார் என கடைசி வரை பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கவில்லை. பாரதத்தின் தெருக்களிலும் ஆங்கிலேயர்களின் கோட்டைகளுக்கும் சகஜமாக மலை ஆடு போல துள்ளித் திரிந்து இருநூறாண்டு ஆங்கில சாம்ராஜ்யத்தை தன் மூளையால் முட்டி முட்டி தரை மட்டமாக்கினார்.
*பல கோடிகள் செலவு செய்து கட்டப்பட்ட பதுங்கு குழியில் பதுங்கிக் கொண்டு தொலைக்காட்சியை பார்த்து நேரத்தை வீணாக்கிக் கொண்டு நன்றாக வேளா வேளை தின்று கொழுத்து பூசணிக்காய் போல காட்சி தரவுமில்லை. அவர் பின் நின்ற போராளிகளை காய்ந்த கருவாடு போல வைத்திருக்கவுமில்லை.
*மஹாத்மா காந்தி எந்த ஒரு பெண்ணையும் விதவையாக்கி அவள் கோபத்திற்கு ஆளாகவுமில்லை. அவள் ஆவேசம் கொண்டு பழிவாங்கக் கிளம்பிய பொழுது அந்த தாக்குதலை சமாளிக்க முடியாமல் திக்குமுக்காடவுமில்லை. வீரன் வீரன் என கைப்புள்ளை போல வெற்று வாய் சவடால் பேசி விட்டு ஒரு பெண்ணின் சாதூர்யத்தால் மிதிபட்டு மாயவுமில்லை.
* எல்லாவற்றுக்கும் மேலாக மஹாத்மா காந்தி தான் நடத்திய எல்லா போராட்டங்களிலும் தாமே முன் நின்று போராடினார். தாம் காப்பதாக சொன்ன மக்களையே மனிதக் கவசங்களாக பயன்படுத்திக் கொண்டு அவர்கள் சித்திரவதைக்கு ஆளாகி சீரழிக்கப்பட்டு கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட போதும் கூட தன் உயிர் பெரிதென தன் உயிரை காத்துக் கொண்டு பதுங்கி பதுங்கி பதுங்குக் குழிக்குள்ளேயே உட்கார்ந்து தான் காப்பதாக சொன்ன இனத்தையும் அழித்து தன் குடும்பத்தையும் அழித்து கடைசியில் தானும் அழியவில்லை.

இதையெல்லாம் தமிழ்நாட்டில் இருக்கும் சில கோமாளிகள் புரிந்து கொள்ள வேண்டும். வீணாக கோழைகளையும் முட்டாள்களையும் அயோக்கியர்களையும் தலைவெனென்று சொல்லிக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு மஹாத்மா காந்தியையும் கர்மவீரர் காமராஜரையும் ஸ்ரீராமரையும் தலைவர்களாக ஏற்றுக் கொண்டால் தான் இந்த நாட்டிற்கு நல்ல காலம் என்பது வரும்.

அதன் முதல் படியாக காக்கை எச்சமிட்டுருக்கும் மஹாத்மா காந்தி சிலைகளையும் காமராஜர் சிலைகளையும் இந்தக் கோமாளிகள் நன்றாக கழுவ வேண்டும். பின்னர் அந்த புனித நீரை தீர்த்தமென கருதி இவர்கள் பருக வேண்டும் அப்பொழுது தான் இவர்களுக்கு அஞ்ஞானம் என்பது நீங்கி நல்லறிவு பிறக்கும்.

நல்லதுக்கும் கெட்டதுக்கும் இருக்கும் வித்தியாசம் தெரியும்.
கோழைக்கும் வீரனுக்கும் இருக்கும் வித்தியாசம் தெரியும்.


ஸ்ரீராமர் காந்தி மகானுக்கு செய்த கௌரவம்:
-------------------------------------------------------------

இந்த வீரத்தை அண்ணலுக்கு அவர் பரசுராமராக இருந்த பொழுது கற்றுத் தந்த  ஸ்ரீராமரே ஆயுதம் ஏந்தாமல் போராடக் கூடிய இந்தக் களத்தை தன் பக்தரான காந்தியடிகளுக்கு விட்டுக் கொடுத்து, ஆயுதம் ஏந்தி போராடிய தன்னை விடவும் அயுதம் ஏந்தாமல் போராடிய தன் பக்தனே தன்னை விட உயர்ந்தவனென்று உலகுக்கு உயர்த்திக் காட்டிவிட்டார். இது முதல் கௌரவம்.

இரண்டாவது கௌரவம்:
-----------------------------------

இவ்வுலகம் இப்படியொரு வீரனை என்றும் கண்டதில்லை என்று அறிவுடையோர் போற்றும்படியாக திகழ்ந்த அண்ணலுக்கு ஸ்ரீராமர் செய்த மரியாதையே மார்பில் மூன்று குண்டுகளை ஏற்று அண்ணல் காந்தியடிகள் அடைந்த வீர மரணமாகும்.

ராம நாமம் ஜபிப்பவரை எவரும் எதுவும் செய்துவிட முடியாது என்பதே ராம நாமத்தின் மகிமை. அப்படியிருந்தும் எப்படி ஒருவனால் மகாத்மாவை சுட முடிந்தது என்பது எனக்கு வெகு நாட்களாக சந்தேகம் இருந்தது. அது ஸ்ரீராமரே தன் பக்தருக்கு செய்த மரியாதை என்பது பின்பு எனக்கு புரிந்தது.


மங்காமல் என்றும் ஒளிர்கவே மாவீரர் மகாத்மா காந்தியின் புகழ்!
மலை போல் என்றும் வளர்கவே குருமஹராஜ் ஸ்ரீராமகிருஷ்ணர் புகழ்!
சீரறாச் செல்வம் போல் சேர்கவே என் ஆசான் ஸ்ரீகிருஷ்ணருக்கே புகழ்!
அனைத்துலகையும் ஆள்கவே என் ஆதர்ஷ ஸ்ரீ ராமசந்திரர் புகழ்!!

ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்!
ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்!!

1 comments:

ramesh sadasivam said...

பரசுராமர் சிரஞ்சீவி என்பது உணராமல் இவ்வளவு எழுதியுள்ளேன்....அய்யோ அய்யோ..